செய்திகள்

துனிசியா கடற்கரையில் தீவிரவாதியின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்கு 27 பேர் பலி

துனிசியா நாட்டில் உள்ள கடற்கரையோர ஓய்வு விடுதியின் அருகே இன்று புகுந்த தீவிரவாதி இயந்திர துப்பாக்கியால் சுட்டு நடத்திய வெறியாட்டத்துக்கு 27 பேர் பலியாகியுள்ளனர்.

துனிசியாவின் தலைநகரான துனிஸ் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சவ்ஸி கடற்கரைப் பகுதி உள்நாட்டினர் மற்றும் ஐரோப்பிய நாட்டினர் தேடிவந்து தங்கி இளைப்பாறும் சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. இங்குள்ள இம்ப்ரியல் மர்ஹபா ஓட்டல் பகுதியில் திடீரென புகுந்த ஒரு தீவிரவாதி அங்கு கூடியிருந்த மக்களின் மீது இயந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான்.

இதில் 27 பேர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் காயம் அடைந்தனர் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த தீவிரவாதி கொல்லப்பட்டதாக துனிசியா நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது அலி அரோவி தெரிவித்துள்ளார்.