செய்திகள்

துப்பாக்கியுடன் கைதான கோப்பரல் தொடர்பாக நாமலிடம் விசாரணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்தில் இராணுவக் கோப்பரல் ஒருவர் ஆயுதமொன்றுடன் பங்கேற்றமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

அம்பாந்தோட்டை அங்குனுகொல பலஸ்ஸவில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றுடன் இராணுவ கோப்பரல் கூட்டத்திற்குச் சென்றிருந்த வேளை, அந்தக் கோப்பரலை பொலிஸார் கைது செய்தனர்.

இவரை நீதிமன்றில் ஆஜர்செய்த போது 12 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்த இராணுவக் கோப்பரல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துகள் காரணமாக விசாரணை நடத்தப்படவுள்ளது.

இராணுவக் கோப்பரல் தண்ணீர் போத்தல் ஒன்றையே வைத்திருந்தார் எனவும் கைத்துப்பாக்கி எதனையும் எடுத்துச் செல்லவில்லை எனவும் நாமல் தெரிவித்திருந்தார். கைத்துப்பாக்கியுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் கூட்டத்தில் நடமாடிய இந்த இராணுவ கோப்பரலை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை செய்யாது விடுவித்திருந்தனர்.

இவ்வாறு எவ்வித விசாரணையும் செய்யாது விடுவிக்கப்பட்டமையின் பின்னணியில் நாமல் ராஜபக்ஷவிற்கு தொடர்புண்டா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்யவுள்ளனர். இந்த இராணுவக் கோப்பரல் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.