செய்திகள்

துமிந்த சில்வாவை ஏன் கைது செய்யவில்லை: கேள்வி எழுப்புகின்றார் ஹருனிக்கா

“துமிந்த சில்வாவின் போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் எனது தந்தை வெளிப்படுத்தியமையே அவரின் கொலைக்குக் காரணமாக அமைந்தது. இவ்வாறு இருக்கும் போதும் ஏன் இந்த நபரை கைது செய்வதில்லை என மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை எற்பாடு செய்து சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“போலி ஆவணம் தொடர்பில் அண்மையில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டார். போலி ஆவண குற்றச்சாட்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் அதற்கு துணைபோதல் என்பன பாரிய குற்றச்சாட்டாகும்.

எவரேனும் இதில் கைது செய்யப்பட்டால் பிணை வழங்கப்பட மாட்டாது. இது வேடிக்கையாக இருக்கின்றது. இது மக்களுக்கு பிரச்சினையாக உள்ளது.  குற்றங்கள் நிறுத்தப்படும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் மக்கள் எமக்கு வாக்களித்தார்கள். ஊழல் மிகுந்த அரசாங்கத்தில் குற்றமிழைத்தவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள், நல்லாட்சியிலும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என மக்கள் கருதுகிறார்கள்” எனவும் ஹிருணிக்கா குறிப்பிட்டார்.

மேலும், தனது தந்தையின் கொலை தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் சாட்சிகளை முன்நிறுத்த ​வேண்டும் என வலியுறுத்திய ஹிருணிக்கா பிரேமச்சந்திர, குற்றமிழைத்தால் எவராக இருந்தாலும் அது குற்றம் தான் எனவும் சுட்டிக்காட்டினார்.