செய்திகள்

துருக்கி வணிக வீதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி-20 பேர் காயம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
வணிக வீதியான இஸ்திக்லால் கட்டேசி தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் இன்று நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில்,  பலர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். தகவல் அறிந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்களிடையே பீதி ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்திருப்பதாகவும் நகர ஆளுநர் வாசிப் சாகின் கூறியதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில் மூன்று பேர் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கியில் குர்து கிளர்ச்சியாளர்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாக, குர்திஷ்தான் சுதந்திர பருந்துகள் (பிஏகே) என்ற கிளர்ச்சிக்குழு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.எஸ். அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது. பாதுகாப்பு படையிடம் தோல்வி அடைந்ததால் பொதுமக்களை குறிவைத்து தீவிரவாத குழுக்கள் தாக்குவதாக அதிபர் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.