செய்திகள்

தூய குடிதண்ணீரை உறுதிப்படுத்தக் கோரி யாழ். நல்லூர் முன்றலில் அமைதிப் பேரணி

யாழில் தூய குடிதண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தி அமைதிப் போராட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை நல்லூர் ஆலய முன்றலில் நடத்தப்பட்டது.

“நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்” என்னும் தலைப்பில் தூய நீருக்காக பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையம், விதை குழுமம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின.

இன்று முற்பகல் 10 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் போராட்டம் ஆரம்பமாகி அங்கிருந்து ஊர்வலமாக யாழ். செயலகத்தை அடைந்த போராட்டக்காரர்கள், யாழ். அரச அதிபர், ஆளுநர் மற்றும் முதல்வருக்கான மனுக்களைக் கையளித்தனர்.

இதேவேளை நீரைப் பருகலாமா? பருகக்கூடாதா என்று அடுத்த 78 மணித்தியாலயங்களுக்குள் உறுதியளிப்பு தரும் வரையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தாம் மேற்கொள்ளப் போகின்றனர் என்று இந்த அமைதிப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த 5 இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், மருத்துவர்கள், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.