செய்திகள்

தூய நீருக்கான போராட்டம்: தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுரிமையோடு தொடர்புடையது

தூய நீருக்கான போராட்டம் என்பது வெறுமனே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களது தனிப்பட்ட பிரச்சினை அல்ல, தமிழ்மக்களின் வாழ்வுரிமையோடு தொடர்புடையது.

இவ்வாறு இலங்கைத் தமிழர் மேம்பாட்டுப் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் பிரதேசத்தில் தூய நீர் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ்.நல்லூரில் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாசடைந்த நீரைப் பருகுவதால் ஏற்படும் பாதிப்புக்களை மருத்துவ சமூகம் நன்கறியும். இதுவரை நிலத்திற்காகப் போராடிய தமிழர்கள் இன்று குடிநீருக்காகப் போராட வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. இச் சூழ்நிலை உருவாகுவதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், இதனைத் தவிர்க்க வடமாகாண சபையினை மாங்குளத்தில் அமைப்பதற்கு அப் பிரதேச குடிநீரைப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே தீர்மானம் நிறைவேற்றப்படும் என வாய்பிளந்தவர்கள் இன்று மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சினையில் அக்கறையற்றிருப்பது அரசியல்சார்ந்த உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றது. சில அரசியல் வாதிகள் தங்களின் இருப்புக்களைத் தக்க வைக்க மக்களிடம் குடிநீருக்கான வாக்குறுதிகளை வழங்கி நாட்களை நகர்த்த முனைந்து வருவது எம்மால் கண் கூடாகக் காணக் கூடியதாகவுள்ளது.

அன்றாட உணவிற்கே திண்டாடும் நிலையில் வறுமைப்பட்ட மக்கள் மாசடைந்த நீரைப் பருக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ்ச் சமூகத்தின் இருப்பைக் கேள்விக் குறிக்குள்ளாக்கும் குடிநீர்ப் பிரச்சினையை அரசியல் கலப்படமற்ற மக்கள் போராட்டமாக முன்னெடுக்க அரச மற்றும் அரச சாரா உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்கள் என அணி அணியாகத் திரண்டு தூய நீருக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முன்வருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். யாழ்ப்பாணத்தின் தூய நீரிற்கான போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சமூகச் செயற்பாட்டாளர்களின் ஒப்பற்ற தன்னிகரில்லாத அர்ப்பணிப்பைப் பாராட்டுகின்ற அதேவேளை எமது மனப்பூர்வமான ஆதரவினையும் தூயநீரிற்கான போராட்டத்திற்கு வழங்குகிறோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

Jaffana-Water-Protest_010 water-crisis_001

-யாழ்.நகர் நிருபர்.