செய்திகள்

தென்ஆப்பிரிக்காவுடன் நாளை மோதல்: வெஸ்ட்இண்டீஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று ஓய்வு நாளாகும். நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது.மொகாலியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியா– அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் (குரூப் 2) அணிகள் மோதுகின்றன.ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. 2–வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. அரை இறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க அந்த அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். வங்காளதேசத்திடம் அந்த அணி போராடியே வென்று இருந்தது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கவனத்துடன் விளையாடுவார்கள்.பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை மட்டுமே வென்று இருந்தது. இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்றது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதே நேரத்தில் இந்தியா– ஆஸ்திரேலியா முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.நாக்பூரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2–வது ஆட்டத்தில் டாரன் சமி தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ்– டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.வெஸ்ட்இண்டீஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், 2–வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இலங்கையையும் வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவை நாளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.தென்ஆப்பிரிக்க அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. 2–வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 2 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க வெஸ்ட்இண்டீசை கண்டிப்பாக வெல்ல வேண்டும்.இரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.