செய்திகள்

தென் கொரியாவில் மெர்ஸ் நோய்க்கு 8-வது நபர் பலி: நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்வு

சவுதி அரேபியா  சுற்றுலா சென்றுவிட்டு தென் கொரியாவுக்கு திரும்பிய 60 வயது நபரால் அந்நாட்டில் நேற்று முன்தினம் வரை 87 பேரை மெர்ஸ் நோய் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் இருவர் இந்நோய்க்கு பலியானதுடன், மேலும் 13 பேரை இந்நோய் தாக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல் சில தினங்களுக்கு முன் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக இருந்த நிலையில், தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 108 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய் பரவுவதை தொடர்ந்து பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால், அந்நாட்டு பலசரக்கு கடைகளின் விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளது.

ஆனால் அதே சமயம் இணையதளம் மூலம் நடைபெறும் வர்த்தகத்தில் 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல சினிமா காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனையும் 54.9 சதவீதம் சரிவடைந்ததுடன், கேளிக்கை பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் 60 சதவீதம் குறைந்துள்ளது.இதையடுத்து இந்நோயை கண்டு மக்கள் மிகுந்த கவலையடைய தேவையில்லை என்று கேட்டுக்கொண்டுள்ள அந்நாட்டு நிதியமைச்சர் சோய் கியுன்-ஹுவான், நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்குமாறு கூறியுள்ளார்.