செய்திகள்

தெரேசா அறக்கட்டளை முன்னாள் தலைவர் நிர்மலா ஜோஷி காலமானார்

அன்னை தெரசாவால் நிறுவப் பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’ யின் முன்னாள் தலைவரான சகோதரி நிர்மலா ஜோஷி (81) உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் நேற்று காலை காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரி நிர்மலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன்பிறகு படிப்படியாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. நேற்று காலையில் அவரது உயிர் பிரிந்தது.

நிர்மலாவின் உடல் சீல்டாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் தேவால யத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் இன்று அன்னை இல்லத்தில் வைக்கப்படும். அஞ்சலிக்குப் பிறகு மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும்.

அன்னை தெரசா 1997 செப்டம்பர் 5-ம் தேதி இறந்தார். அவர் இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன்பு 1997 மார்ச் 13-ம் தேதி அறக்கட்டளையின் தலைவராக (சுப்பீரியர் ஜெனரலாக) நிர்மலா ஜோஷி பொறுப்பேற்றார்.