செய்திகள்

தெற்கின் அரசியல் குழப்பங்கள் தமிழர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

யதீந்திரா
தென்னிலங்கையின் அரசியல் தொடர்ந்தும் ஒரு குழப்ப நிலையில்தான் இருக்கிறது. இந்தக் குழப்பங்கள் அனைத்தினதும் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை இப்போதைக்கு ஊகிக்க முடியாவிட்டாலும் கூட, ஒரு இலக்கை முன்னிறுத்தியே இவ்வாறான குழப்பங்கள் நிகழுகின்றன. 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தொடர்பில், இந்தப் பத்தியாளர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதவாது, இந்த ஆட்சி மாற்றமானது ஒரு குறைப்பிரசவ குழந்தை. இதன் அயுள் மிகவும் குறுகியது ஏனெனில் ஆட்சி மாற்றம் பெரும்பாண்மையான சிங்கள மக்களின் விருப்பிலிருந்து நிகழவில்லை மாறாக ஆட்சி மாற்றமானது, நன்கு திட்டமிடப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் ஊடாக சிங்கள மக்கள் மீது திணிக்கப்பட்டது. ஏனெனில் 2015 ஜனவரி 8இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பெரும்பாண்மையான சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்சவையே தங்களின் தலைவராக தெரிவு செய்திருந்தனர். பெரும்பாண்மை சிங்கள மக்கள் தன் பக்கமாக நிற்கின்றனர் என்னும் உற்சாகம்தான் மகிந்த தொடர்ந்தும் அரசியல் அரங்கில் நிலைத்திருந்தமைக்கும் காரணம். ஒரு வேளை 2015 ஜனாதிபதி தேர்தலின் போது சிங்களப் பொரும்பாண்மை மைத்திரியின் பக்கமாக நின்றிருந்தால் மகிந்த அரசியல் அரங்கிலிருந்து தானாகவே அகன்றிருப்பார் அல்லது அவரை அரசியிலிருந்து அன்னியப்படுத்துவது மிகவும் இலகுவாகியிருக்கும். சர்வதேச அரசியல் சூழலில் பலம்பொருந்திய சக்திகள் தங்களது நலன்களுக்கு குந்தகமான ஆட்சியாளர்களை வீழ்த்துவதற்கு இவ்வாறான ஆட்சி மாற்ற உக்திகளிலில் ஈடுபடுவது புதிதல்ல. அதே வேளை அவ்வாறான ஆட்சி மாற்ற உக்திகள் தலைகீழான விளைவுகளையும் கூட சில வேளைகளில் ஏற்படுத்திவிடுவதுண்டு.

மகிந்த அதிகம் சீனாவை நோக்கி சாய்ந்து கொண்டிருந்த ஒரு பின்னணியில்தான், 2015இல் மகிந்தவின் முகாமிலிருந்து. மைத்திரிபாலவை வெளியில் இழுப்பதன் ஊடாக, ஆட்சி மாற்றமொன்று சாத்தியப்பட்டது. ஆனாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு, மகிந்தவை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் ரணில்-மைத்திரி கூட்டு செயற்பட்டிருக்கவில்லை. அதே வேளை, மகிந்தவின் சிங்கள ஆதரவை தங்கள் வசப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களும் புதிய ஆட்சியாளர்களிடம் இருந்திருக்கவில்லை. ரணில்-மைத்திரி கூட்டில், ஒப்பீட்டடிப்படையில் பொருளாதார நிலைமை மோசமடைந்து சென்றது. இதன் காரணமாகவே சிங்கள மக்கள் மத்தியில் கூட்டரசாங்கத்தின் மீது கடுமையான அதிருப்திகள் ஏற்படுவதற்கான புறச் சூழலே தொடர்ந்தும் காணப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், கடந்த ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலின் போது, பிரதான கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பாரம்பரிய சிங்கள ஆதரவுத் தளங்களையும் மீறி, மகிந்த தலைமை தாங்கிய பொதுஜன பெரமுன பொரும்பாண்மை மக்கள் ஆதரவுத் தளமொன்றை நிரூபித்திருந்தது. ஆளும் இரண்டு பிரதான கட்சிகளையும் தோற்கடித்ததன் மூலம், மகிந்த தனது மக்கள் செல்வாக்கை மீண்டுமொருமுறை தெளிவாக நிரூபித்திருந்தார். இதன் மூலம், ஆட்சி மாற்றமானது தென்னிலங்கையில் மகிந்தவிற்குள்ள செல்வாக்கை எந்த வகையில் அசைக்கவில்லை மாறாக, மேலும் அதிகரித்திருக்கிறது என்னும் உண்மையை வெள்ளிடைமலையானது. ஆட்சி மாற்றத்தை உந்தித்தள்ளிய பலம்பொருந்திய நாடுகளுக்கும் இது ஒரு தெளிவான செய்தியை சொல்லியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, யார் யாரை எதிர்கொள்ளுவது? யாரால் யாரை எதிர்கொள்ள முடியும்? என்றவாறான கேள்விகளால் தெற்கின் அரசியல் அரங்கு முற்றிலுமாக குழும்பியிருக்கிறது. முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகம் நம்பிக்கொண்டிருந்த, இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிற ரணில் தரப்பே அதிகம் குழம்பமடைந்திருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை திர்மானிக்க முடியாதளவிற்கு தொடர்ச்சியான இழுபறிக்குள் சிக்குண்டிருக்கிறது. மகிந்தவின் முகாமில் ஒப்பீட்டடிப்படையில் பெரிதான குழப்பங்கள் இல்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபாய ராஜபக்ச, தனது அரசியல் வேலைத்திட்டங்களை தடுமாற்றமின்றி முன்னெடுத்து வருகின்றார்.

Ranil. gota, sajith

இந்த இடத்தில் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது? முக்கியமாக தென்னிலங்கையின் குழப்பங்களிலிருந்து எதைக் கற்றுக்கொள்ளப் போகிறது? ஆகக் குறைந்தது கற்றுகொள்ளும் எண்ணமாவது இருக்கின்றதா? எந்தவொரு குறிப்பிட்ட சூழ்நிலைகளிலிருந்தும் விடங்களை கற்றுக்கொள்வதற்கு. முதலில் கற்றுக்கொள்ளும் எண்ணம் அடிப்படையானது. தனது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதையே தீர்மானிக்க முடியாமல் தங்களுக்குள் தள்ளாடும் ஜக்கிய தேசியக் கட்சியால் தமிழ் மக்களுக்கு தீர்வை தரமுடியுமென்று எவ்வாறு தமிழர்கள் நம்பலாம்? ஜக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித்பிரேமதாச தன்னை தானே ஜனாதிபதி வேட்பாளராக பிரகடணம் செய்து வருகின்றார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு வேளை சஜித் நிராகரிக்கப்பட்டால், ஜக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு பெரும் பிளவு ஏற்படலாம் என்றும் கணிக்கப்படுகிறது. சஜித்பிரேமதாச அதிகாரத்திற்கு வந்தால், ஜக்கிய தேசியக் கட்சியின் மீதான ஏகபோக உரிமையை ரணில் விக்கிரமசிங்க இழக்க நேரிடும். ரணிலின் அரசியல் வாழ்வு சூனியமாகும். ஜக்கிய தேசியக் கட்சிக்குள் இடம்பெறும் வேட்பாளர் இழுபறியை இந்த பின்புலத்தில்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இன்று தென்னிலங்கையில் முக்கியமாக ரணில் தரப்பிற்குள் நிகழும் முரண்பாடுகள், இழுபறிகள் எவையும் நாட்டின் எதிர்காலத்திற்காக இடம்பெறவில்லை. அனைத்துமே சிங்கள ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் போட்டியின் விளைவாகும். அதே போன்று, மறுபுறமாக இழந்த அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ராஜபக்ச குடும்பம் திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த அதிகாரப் போட்டியில் எவர் அதிகாரத்திற்கு வந்தால் தங்களது மூலோபாய நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதுதான் பலம்பொருந்திய நாடுகளின் ஒரேயொரு கரிசனையாகும். ஒரு விடயம் தெளிவானது. அதவாது, எவ்வாறு 2015இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் மக்களின் பிரச்சினை பேசாப் பொருளானதோ, அவ்வாறானதொரு நிலைமையே மீண்டும் தென்படுகிறது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டால் அது மற்றைய வேட்பாளர்களுக்கு வாய்ப்பாகிவிடும், இதனால் சிங்கள மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்றவாறான ஒரு கதையையே அனைவரும் சொல்லப் போகின்றனர். ஜே.வி.பியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கின்ற நிலையில், மும்முனைப் போட்டியில் தமிழர் பிரச்சினைகள் நிச்சயம் காணமால் போய்விடும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சார அலையில் தமிழர் பிரச்சினை அள்ளுண்டு போகாமல் இருக்க வேண்டுமானால், தமிழர் பிரச்சினையையும் ஒரு பேசுபொருளாக்கும் தந்திரோபாயம் தொடர்பில் தமிழர் தரப்ப்புக்கள் சிந்திக்க வேண்டும்?

தென்னிலங்கையின் குழப்பங்களிலிருந்து தமிழர் தரப்புக்கள் ஒரு விடயத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் அதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ரணிலை நம்புதல், சந்திரிக்காவை நம்புதல் என்னும் அடிப்படையில் நிலைமைகளை அணுகாமல், வெற்றிபெறப் போகும் எவருடன் மேசையில் அமரக் கூடிய ஒரு தந்திபேராயம் தொடர்பில் சிந்திப்பதே தமிழர்களுக்கு உசிதமானது. அதே வேளை தமிழர் பிரச்சினை ஜனாதிபதி பிரச்சார அலையில அள்ளுண்டு போவதை தடுக்க வேண்டுமாயின், தமிழர் தரப்பில் ஒரு வேட்பாளரை முன்னிறுத்தி, ஆகக் குறைந்தது நான்கு லட்சம் தமிழ் மக்கள் குறித்த வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடியதொரு நிலைமையை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பில் கூட்டமைப்பும், கூட்டமைப்புடன் கொள்கை அடிப்படையில் முரண்பட்டுநிற்கும் அனைத்து தரப்புக்களும் கலந்துரையாடி ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வர முடியும். வெறுமனே நம்பிக்கை அடிப்படையில் வாக்களிப்பதை தமிழர்கள் இனியாவது தவிர்க்க வேண்டும். தென்னிலங்கையின் இன்றைய குழப்ப நிலைமை அதனைத்தான் தெளிவாக உணர்த்துகின்றது. இதிலிருந்து கற்றுக்கொள்வது தொடர்பில்தான் தமிழர் தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்.