செய்திகள்

தெளிவான அரசியல் திட்டத்தை இலங்கை முன்வைக்க வேண்டும்: இந்திய அதிகாரி கூறுகின்றார்

மைத்திரிபால தலைமையிலான புதிய அரசாங்கம் இனப்பிளவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, தெளிவானதொரு அரசியல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று இலங்கை விவகாரங்களுடன் தொடர்புடைய இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள, நல்லெண்ண நடவடிக்கைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லெண்ணச் செயற்பாடுகளை இந்திய அதிகாரிகள் வரவேற்பதாக எக்கனொமிக்  ரைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ள, எக்கனொமிக் ரைம்ஸ், இந்த சாதகமான மாற்றங்களை இந்தியா வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், புதிய அரசாங்கம் நாட்டின் இனப்பிளவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, 13வது திருத்தச்சட்டத்தின் மீது கட்யெழுப்பப்பட்ட தெளிவான அரசியல் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இலங்கை விவகாரத்துடன் தொடர்புடைய இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும், எக்கனொமிக் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.