செய்திகள்

தெவிண்டப் பிராய் முருகன் ஆலயத்தில் நாளை அன்னதான மடம் திறப்பு

ந.சபாரத்தின சிங்கி

வட்டுக்கோட்டை துணைவி தெவிண்டப்பிராய் பகுதியில் முருகப் பெருமான் வள்ளி,தெய்வயானை சமேதராய் கோயில் கொண்டுள்ள ஆலயம் ” தெவிண்டப்பிராய் முருகன் கோயில் ‘என்ற திருநாமத்தோடு விளங்கிவருகின்றது.

“மணியகாரன் கோயில்’ என முன்னர் அழைக்கப்பட்டு வந்த தொன்மை மிகு இவ்வாலயத்தின் ஈசான மூலையில் திருமதி ஆறுமுகம் தில்லைநாயகியின் மூதாதையர்களினால் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவந்த முருகைக் கல்லாலான மடம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது. காலப் போக்கில் அம்மடம் அழிந்து விட்ட காரணத்தால் ஆலயத்தின் தெற்கு வீதியில் புதிய மடம் ஒன்று கட்டப்பட்டு திருவிழாக் காலங்களில் அன்னதானப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கனடாவில் வசிக்கும் பொறியலாளர் வட்டுக்கோட்டை கொட்டக் காட்டைச் சேர்ந்த பொறியியலாளர் தம்பு ஆறுமுகம் அவர்கள் தனது மனைவியான திருமதி ஆறுமுகம் தில்லை நாயகியின்  மூதாதையர்களால் அமைக்கப்பட்டிருந்த மடம் இருந்த இடத்தில் தனது மனைவியின் நினைவாக புதிய மடம் ஒன்றை அமைக்க விரும்பினார். அவ் விருப்பத்தின் விளைவாக அமைக்கப்பட்ட ” திருமதி ஆறுமுகம் தில்லை நாயகி ஞாபகார்த்த மடம் ‘  சித்திராபூரணை தினமான நாளை வியாழக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளதோடு மகேஸ்வர பூஜையும் ( அன்னதானம் ) இடம்பெறவுள்ளது.தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் பூரணை தினங்களில் அன்னதானப் பணியை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை தம்பு ஆறுமுகம் செய்துள்ளார்.

 தம்பு ஆறுமுகம்  மடம் நிறுவியதோடு மட்டுமல்லாமல் ஆலயக் கேணியைப் புனரமைத்தும் நந்தவனம் ஒன்றை நிறுவியும் உதவியுள்ளார். இவ்விடத்தில் சமூக சேவையாளர் கனகரட்ணத்தின் பணியும் பாராட்டிற்குரியது. சில வருடங்களுக்கு முன்னர் ஆலயத்திற்கு இராஜகோபுரம் ஒன்றை அமைக்க விரும்பி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி சு.திருஞானசம்பந்தர் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்ட வேளை அவரோடு கைகோர்த்து திட்டமிட்டு இராஜகோபுரம் அமைய உழைத்தவர். தம்பு ஆறுமுகம் என்பதும் நினைவுகூரத்தக்கதாகும்.

சமயப் பணிகளில் மட்டுமன்றி சமூகப் பணிகளிலும் ஈடுபாடு காட்டி வரும் தம்பு ஆறுமுகம் வட்டுக் கோட்டையில்  உள்ளதனது இல்லத்தில்  தையல் பயிற்சி நிலையமொன்றும்  அமைக்கப்பட்டு வறிய பிள்ளைகளுக்கு இலவச தையல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்து காலாகாலமாக இயங்க அதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

n10