செய்திகள்

தேசிய அரசாங்கத்தில் இணைவதா? ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அவசர கூட்டம்

அரசியலமைப்புக்கான சீர்திருத்தம் மற்றும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது போன்ற விடயங்களை ஆராய்வதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று கொழும்பு டார்லி வீதியிலுள்ள அதன் தலைமையகத்தில் இன்று அவசரமாகக் கூடுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய குழுவின் கூட்டம் நடைபெறவிருக்கும் அதேவேளையில் கட்சியின் உயர் குழு ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளது. அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்தே இங்கு முக்கியமாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய சந்திப்பில் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டாலும், மார்ச் இரண்டாம் வாரத்தில் அரசியலமைச்சு சீர்திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.