செய்திகள்

தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்: கட்சியின் உயர் குழு இறுதி முடிவை எடுக்கும்

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அதிகாரத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் உயர் மட்டக்குழு ஒன்றிடம் கையளிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றது. இதன் அடிப்படையில் கட்சியின் தலைவர், செயலாளர், தேசிய அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரே தேசிய அரசாங்கம் தொடர்பான முடிவை மேற்கொள்வார்கள்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவின் கூட்டம் நேற்றிரவு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற போது தேசிய அரசாங்கத்தை அமைத்துக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்கான அதிகாரம் கட்சியின் உயர் மட்டக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

நேற்று நீண்ட நேரம் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வது என்ற தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தவிர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி சிறிசேன தலைமையில் உயர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரயதர்சன யாப்பா, தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பார்கள்.