செய்திகள்

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியை ஏற்கமுடியாது: ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு

ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பதிலாக தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பி., இதற்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இவ்வருடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்தலைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஆதரிக்கப்போவதில்லை எனவும், ஏப்ரல் 23 ஆம் திகதி உறுதியளிக்கப்பட்டது போல பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் எனவும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய அவசியம் உண்மையாகவே இருக்குமானால், பொதுத் தேர்தலை நடத்திய பின்னர் அதனை அமைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார். “தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எந்தவிதமான முயற்சியிலும் நாம் ஒரு பங்காளராக இருக்கமாட்டோம்” எனவும் அவர் தெரிவித்தார்.