செய்திகள்

தேசிய அரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு கூடி ஆராய்ந்தே முடிவு: சுரேஷ்

தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிப் பேசி ஆராய்ந்தே முடிவினை எடுக்குமென அதன் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதினைப் பொறுத்தே இது தொடர்பில் சிந்திக்க முடியுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 11 பேருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள், 5 இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 10 பேருக்கு பிரதியமைச்சர் பதவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய அரசில் கூட்டமைப்பு பங்கெடுக்குமா என சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைக்கு தேசிய அரசாங்கம் தீர்வு காணும் விடயத்தைப் பொறுத்தே அதில் இணைவது குறித்து யோசிக்க முடியும், அதாவது மீள்குடியேற்றம் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பிலான விடயமென தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதைப்பொறுத்தே தேசிய அரசில் இணைவது குறித்து நாம் சிந்திக்க முடியும்.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சாத்தியப்பாடுகள் இல்லையென நான் கருதுகிறேன். இவ்வாறான சூழலில் இவ்விடயம் குறித்து கட்சி கூடி ஆராய்ந்தே முடிவுகளை மேற்கொள்ளும் என்றார்.