செய்திகள்

தேசிய கீதம் தொடர்பில் சிங்கள ராவய வழக்கு தொடர்வதை வரவேற்கின்றேன்! – மனோ கணேசன்

தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதியளித்த தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. இதை தான் முழுமனதுடன் வரவேற்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

நேற்று நடத்திய ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சீலரத்ன தேரர், தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதியளித்தமைக்காக தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களை கண்டித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை கண்டு நான் பயந்துவிடவோ அல்லது கவலைப்படவோ போவது இல்லை. உண்மையில் சிங்கள ராவய தேரர்களின் இந்த அறிவிப்பை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். இதன்மூலம் நம் நாட்டில் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டு பேசி வாழ்வோரது அந்தஸ்த்து என்ன என்பதை பற்றி உலகம் அறிந்துக்கொள்ள முடியும். உண்மையை வெளியே கொண்டுவர முயலும் சிங்கள ராவய அமைப்புக்கு இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்ளவே விரும்புகிறேன்.

உண்மையில் இந்த நாட்டில் தேசிய மொழிகள் எவை என்பது பற்றி இவர்களுக்கு தெளிவில்லை. உலகத்தில் பல நாடுகளில் தேசிய கீதம் பாடப்படும் முறைகள் பற்றியும் இவர்களுக்கு தெரியவில்லை. இதையிட்டுதான் நான் வருத்தமடைகிறேன்.

சிங்கள ராவய மற்றும் பொதுபல சேனை ஆகிய பிக்குகளின் தலைமையிலான அமைப்புகளுக்கு இடையில் யார் சிங்கள பெளத்தர்களின் தலைவர்கள் என்று பலத்த போட்டி நிலவுவது எனக்கு தெரியும். இதனால்தான் இவர்கள் இத்தகைய அரசியல் கருத்துகளை வெளியிடுகிறார்கள். இவர்களுக்கு போட்டியாக நாளை, பொதுபல சேனை அமைப்பு என்னையும், தேசிய நிறைவேற்று சபையில் எனது நிலைப்பாட்டுக்கு இவ்விவகாரத்தில் ஆதரவாக இருக்கின்ற ஏனைய உறுப்பினர்களையும் நாடு கடத்த வேண்டும் என்றும் சொல்லலாம்.