செய்திகள்

தேசிய பாதுகாப்புக்கு பாதகமில்லாமல் மீள்குடியேற்றம்: படையினர் மத்தியில் ரணில் பேச்சு

தங்கள் நிலங்களில் தங்களைக் குடியேற்றுமாறு தமிழர்கள் கேட்கின்றார்கள். அவ்வாறு கேட்பதற்கு அவர்களுக்கு 100 வீதம் உரிமையுள்ளது. இதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என முப்படையினருக்கும் பலாலி இராணுவ முகாமில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுரை கூறியிருக்கின்றார்.

“தமிழ் மக்களை அவர்களுடைய நலங்களில் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குடியேற்ற வேண்டும்” எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய விஜயத்தின் இரண்டாவது நாளான நேற்று, பலாலி விமானத் தளத்தில் முப்படையினரையும் சந்தித்து உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் முக்கியமாகக் கூறியதாவது:

“வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முன்லைத்தீவு மாவட்டங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு நாம் முதலில் தீர்வு காண வேண்டும். சமாதான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் நாம் தேடிப்பார்க்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும் என்பதற்காகவே நான் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசினேன். அவர்கள் பல பரச்சினைகளையிட்டு எனக்குத் தெரியப்படுத்தினார்கள். இவை தொடர்பாகவே இன்று உங்களுடன் பேசப்போகிறேன்.

எங்கள் நிலங்களில் எங்களைக் குடியேற்றுங்கள் என தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். இவ்வாறு கேட்க அவர்களுக்கு நுறு வீதம் உரிமை உள்ளது. இதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் குடியேற்றுவதற்கான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாத வகையில் தமிழ் மக்களை அவர்களுடைய இடங்களில் கட்டம் கட்டமாக குடியேற்ற வேண்டும். மீண்டும் பிரிவினைக்கான கோரிக்கை எழுவதற்கான சந்தர்ப்பத்ததை நாம் வழங்கக் கூடாது. எமது கடல்வளங்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடற்படையினரிடமே உள்ளது” எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

0 1  4 5