செய்திகள்

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது வடக்கில் படையினரை குறைக்க முயற்சி பொதுபலசேனா தெரிவிப்பு

புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் இராணுவத்தில் மாற்றங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பொதுபலசேனா அமைப்பு, கடந்த அரசாங்கத்தில் தாம் கொண்டிருந்த கொள்கையிலும் தாம் முன்வைத்த கருத்துக்களிலும் எவ்வித மாற்றம் இல்லையெனத் தெரிவித்துள்ளது.

கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நூறுநாள் செயற்றிட்டத்தில் சிங்கள பௌத்த மக்களின் பிரச்சினைகள் உள்வாங்கப்பட்டு அதற்கான தீர்வு வழங்கப்படவேண்டும். கடந்த காலத்தில் இடம்பெற்ற கூரகல, அளுத்கம போன்ற சம்பவங்களில் உண்மைத் தன்மையை இனங்காண்பதற்கான ஒரு ஆணைக்குழு ஜனாதிபதியால் அமைக்கப்பட்டு கடந்த காலத்தில் சிங்கள மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

பொதுபலசேனா அமைப்பினை இனவாத அமைப்பு என விமர்சனம் செய்யும் முஸ்லிம் தலைவர்கள், தாங்கள் இனவாதிகளாக செயற்படுவதை மறந்து விடுகின்றனர்.

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நாம் முன்வைத்த கருத்துக்களும் எமது கொள்கைகளும் புதிய அரசாங்கத்திற்காக மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை. மைத்திரியின் ஆட்சியிலும் அதே கருத்துக்களை அச்சமின்றி நாம் முன்வைப்போம். அதேவேளை இந் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தேசியக் கொடியையும் பௌத்த கொடியையும் பறக்கவிடுவதற்கான உரிமை எமக்குண்டு.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. சவ+தி அரேபியா அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். முஸ்லிம் மக்களின் பிரதிநிதியென தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலரின் இனவாத விமர்சனங்களால் பெரும்பான்மை சமூகமான சிங்கள பௌத்த மக்களை கோபமடையச் செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.