செய்திகள்

தேர்தலில் இராணுவத்தை ஈடுபடுத்தும் இரகசிய முயற்சி அம்பலம்

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு பொலிசாருக்கு உதவுவது என்ற சாட்டில் முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய கூட்டுப்படைகளின் தளபதியுமான ஜெனரல் ஜகத் ஜயசூரியவை பயன்படுத்தி இராணுவத்தை நடவைக்கையில் ஈடுபடுத்தும் முற்சி ஒன்று அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதன்பொருட்டு ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி ‘உயர் இரகசியம்’ என்று குறிப்பிட்டு சுற்றறிக்கை ஒன்றை பொலிஸ் மா அதிபர் மற்றும் முப் படைகளினது சேவை தளபதிகளுக்கு அனுப்பியதாகவும் , அதில் தேர்தல் காலத்தின் போது , தேவை ஏற்படின் நடவைக்கையில் இறக்கும் பொருட்டு படைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப் பட்டிருந்ததாகவும் கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இராணுவ உயர் அதிகாரிகளினால் வெளியே கசியவிடப்பட்டுள்ள இந்த சுற்றிக்கையினையும் இந்த இணையத்தளம் வெளியிட்டிகிறது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கும் இந்த இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அத்தகைய எந்த அறிவுறுத்தலும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் இதுபற்றி எதுவுமே தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதேவளை, தேர்தல் ஆணையாளருக்கும் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி, கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் இது பற்றி விசாரணைகளை தான் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.