செய்திகள்

தேர்தலுக்குச் செல்லாமலேயே பிரதமரை மாற்ற வேண்டும்: திஸ்ஸ விதாரண

பொதுத் தேர்தலுக்குச் செல்லாமலேயே பிரதமரை மாற்ற வேண்டும். அதற்கு மிகவும் பொருத்தமானவர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவேயாவாரென்று பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை தீர ஆராய்ந்து நிறைவேற்ற வேண்டும். அது வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஓரங்கட்டிவிட்டு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை பிரதமராக்கினாலே அரசாங்கத்தின் செயற்பாடுகளை சுமுகமாக முன்னகர்த்த முடியுமெனவும்அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் முறையின் மறுசீரமைப்பைக் கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்திருந்தால் ஆனால், இன்று அது நிறைவேற்றப் படுவதற்கு முன்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வற்புறுத்தி வருகின்றார்.

பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமென்பதற்காக 20வது திருத்தத்தை நிறைவேற்ற முயல்வது நியாயமற்றது. எனவே தான் தேர்தலுக்குச் செல்லாமலேயே பிரதமரை மாற்றுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோமென்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பில் செய்யப்படும்திருத்தம் மிகவும்ஆராய்ந்து நுட்பமான முறையில் கையாளயப்பட வேண்டிய விடயமாகும். தேர்தல் மறுசீரமைப்பிற்காக அரசியல மைப்பில் கொண்டு வரப்படவுள்ள 20 வது திருத்தமும் அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் செய்யப்பட வேண்டியதொரு விடயமாகும்.

பாராளுமன்றம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரலிலேயே முறைப்படி களைய வேண்டும் அதுவரை காலமும் 20வது திருத்தம் குறித்து தீர ஆராய்ந்து முடிவு எடுக்க எமக்கு கால அவகாசம் உண்டு.

ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாகவிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நம்பிக்கையில்லா பிரேரணையூடாக ஓரங்கட்டுதல் வேண்டும். அவருக்கு பதிலாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷவே அந்தப் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார்.

பிரதமர் ரணில் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. எனவே அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சிரமமான விடயமல்ல. சமல் ராஜபக்ஷ பிரதமரானால் பிளவு பட்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்று சேருவதற்கு வாய்ப்பு கிட்டுமென நான் நம்புகிறேன். எவருடனும் பகைமை கொள்ளாது நட்பு பாராட்டும் நபரென்ற வகையில் சமல் பிரதமராவதைபொது மக்கள் எதிர்க்க மாட்டார்களெனவும் அவர் நம்பிக்கை தெரித்தார்.