செய்திகள்

தேர்தலுக்கு முன் திறமையை காட்டுவாரா திகாம்பரம்? மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் சவால்

மலையகத்தில் தனி வீட்டு திட்டம் என்பது புதிதான விடயமல்ல. ஏற்கனவே  கட்டிமுடிக்கப்பட்ட கணிசமான வீடுகளில் தோட்டத் தொழிலாளர்கள்  வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது தோட்டங்களில் வீடுகட்டுவதாக கூறி விளம்பரம் தேடும் நடவடிக்கைகள் மட்டுமே நடைபெறுகின்றன.

ஏற்கனவே மூன்று மாதங்களாக வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நடவடிக்கைகளே மலையகத்தில் இடம்பெருகின்றன. நான்கு அறைகளை கொண்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தோட்டத்திற்கு ஐந்து முதல் பத்து வீடுகளுக்கே கல்லூண்டப்பட்டுள்ளது. ஆனால் ஒரு தோட்டத்தில் கூட வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. தோட்டங்களில் வீடுகட்டும் நடவடிக்கை உண்மையாக நடக்குமானால் அதற்கு ஒத்துழைக்க முடியும். ஆனால் பாராளுமன்ற வாக்குகளை குறிவைத்து நடத்தப்படும் நாடகங்களுக்கு எவ்வாறு ஒத்துழைக்க முடியும்?

தற்போது ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து நான்கு மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில்  தோட்ப்பகுதிகளில் ஒரு வீடு கூட கட்டிமுடிக்கப்படவில்லை. இதற்கு காலம் போதாது என காரணம் சொல்லப்படுகின்றது. எதிர்வரும் தேர்தலில்  முடிவுகள் இவர்களுக்கு சாதகமாக இருக்காத பட்சத்தில் என்ன காரணத்தை சொல்லப் போகிறார்கள்? 

ஆகவே வெறுமனே காலத்தை கழிக்காமல்  தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் திகாம்பரத்திற்கு இருக்குமானால் ஒரே ஒரு வீடமைப்பு திட்டத்தையாவது தேர்தலுக்கு முன் செய்து காட்ட வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.