செய்திகள்

தேர்தலை சுதந்திரமாக நடத்துங்கள்: ஜனாதிபதி மகிந்தவை தொலைபேசியில் வலியுறுத்தினார் ஜோன் கெரி

இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகளோ, அச்சுறுத்தல்களோ  இன்றி, சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்தியுள்ளார். தொலைபேசியில் நேரில் தொடர்புகொண்டு இதனை அவர் தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நேற்றுக்காலை மகிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதனைத் தெரிவித்துள்ளார் என வாஷிங்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி, “தேர்தல் பரப்புரைகளின் போது நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக வெளியாகின்ற அறிக்கைகள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இலங்கையில், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் செயல்முறைகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. தேர்தல் நம்பகமாகவும், அமைதியாகவும், இடம்பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“அதற்கமைய, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தொலைபேசியில் மகிந்த ராஜபக்‌ஷவுடன் தொடர்பு கொண்டு இன்று நடைபெறும் தேர்தல் சுதந்திரமாகவும், வன்முறைகளின்றியும், அச்சுறுத்தல்களின்றியும் நடத்தப்படுவதையும், வாக்கு எண்ணும் பணி நம்பகமாகவும், வெளிப்படையாகவும் இடம்பெறுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்” எனத் தெரிவித்தார்.