செய்திகள்

தேர்தலை மையமாகக் கொண்டு மக்களை குழப்புகின்ற கருத்துக்களை சில சக்திகள் முன்வைக்கின்றன: சரா எம்.பி.

மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. நேரம் வரும் போது நாங்கள் நேரில் வந்து சரியான பதிலைத் தருவோம். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

தேர்தல் அண்மிப்பதைச் சாதகமாகக் கொண்டு சில சக்திகள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செய்யும் அனைத்து நல்ல காரியங்களையும் திரிவுபடுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றன. தேர்தல் எப்போது நடை பெறும் என்று இன்று வரையாருக்கும் தெரியாது. ஒருவேளை 19ஆவது திருத்த சட்ட வரைவு தோல்வியடைந்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.

இந்தச் சூழ்நிலையில் எப்போதோ நடைபெறவுள்ள தேர்தலை மையமாகக் கொண்டு மிகமிகத் தீவிரமாக கருத்தரங்குகளையும் சிறுசிறு கூட்டங்களையும் ஏற்பாடு செய்து மக்களைக் குழப்புகின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களை சில சக்திகள் முன்வைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளையின் 108 ஆவது நிறைவு விழாவும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்றுமுன்தினம் இரவு சதாவதானி அரங்கில் நிலையத் தலைவர் நா.கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றன. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

சதாவதானி நிலையத்தினர் மாணவர்களின் கல்வியை மேம் படுத்துவதற்காகவும் ஆளுமையை விருத்தி செய்வதற்காகவும் இத்தகை நிகழ்ச்சிகளை நடத்தி வருவது பாராட்டப்பட வேண்டிய விடயம். இந்த மேடை அரசியல் பேசுவதற்கு பொருத்தமில்லாதது. இருந்தாலும் சமகாலத்தில் என்ன நடக்கின்றது என்பதையும், எதனை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்பதையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எமக்குண்டு.

எது சரியானது, எதை மக்கள் செய்யவேண்டும் என்று சொல்ல வேண்டியவர்கள் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். மக்கள் குழப்பமடையத் தேவையில்லை நீங்கள் மிகவும் அவதானமாக இருங்கள்” என்றார்.

இந்த நிகழ்வில் யாழ்.பல் கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடபீடாதிபதி பேராசிரியர் கலாநிதி தி.வேல் நம்பி, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், சதாவதானி கதிரைவேற்பிள்ளை சிக்கனக் கடன் கூட்றவுச்சங்கத் தலைவர் பா.ரகுநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.