செய்திகள்

தேர்தல் அரசியலுக்குள் நான் வரப்போவதில்லை: சந்திரிகா உறுதி

தேர்தல் அரசியலுக்குள் தான் எதிர்காலத்தில் இறங்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அரசியலை ‘குப்பை’ எனவும் வர்ணித்திருக்கின்றார்.

சென்னையிலிருந்து வெளிவரும் ‘இந்து’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், சர்வதேச சமூகத்தின் ஒரு பிரிவினர் உட்பட பல்வேறு தரப்பினரும் மீண்டும் அரசியலுக்கு வருமாறு தன்னை அழைப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.

அவரது மகன் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்கப்பட்டபோது, “எனது மகனையிட்டு என்னால் சொல்ல முடியாது. ஆனால், நான் தேர்தல் அரசியலுக்குள் மீண்டும் வரப்போவதில்லை. அது மிகவும் அழுக்கானது” என சந்திரிகா பதிலளித்தார்.

சந்திரிகாவின் மகன் விமுத்தி குமாரதுங்க அடுத்த பொதுத் தேர்தலின் மூலம் அரசியலில் பிரவேசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் பற்றி கருத்துவெளியிட்ட சந்திரிகா குமாரதுங்க, “அது ஒரு பொலிஸ் அரசாகவே இருந்தது. மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வகையில் மக்கள் வாக்களித்தார்கள். அவரது தவறான ஆட்சி முறையே இதற்குக் காரணம். அதனைவிட அவரது குடும்பத்தினரின் ஊழல் மோசடிகள், மனித உரிமைகள் மறுக்கப்பட்டமை, சில கொலைகள், சதந்திரம் இல்லாத நிலை என்பனதான் அவரது தோல்விக்கு வழிவகுத்த காரணிகள்” எனத் தெரிவித்தார்.