செய்திகள்

தேர்தல் சீர்திருத்தம்: ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வ கட்சிக் கூட்டம்

தேர்தல்முறை மாற்றம் தொடர்பாக ஆராயும் சர்வகட்சிக் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக அமைச்சரவையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டிருப்பதுடன், மேலும் சில யோசனைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த யோசனைகள் தொடர்பில் எதுவித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில் ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கில் சிறுபான்மை கட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்று கூடியிருந்தன. தேர்தல் முறை மாற்றம் தொடர்பான திருத்தச்சட்டமூலம் அவசர சட்டமாகக் கொண்டுவரப்படக்கூடாது, தேர்தல்முறை மாற்றினாலும் நடைபெறும் பொதுத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்பட வேண்டும், முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் முறைமாற்றம் குறித்த யோசனைகள் குறித்து ஆராய்ந்து முடிவுக்கு வருவது என்ற மூன்று தீர்மானங்களுடன் இந்தக் கூட்டம் முடிவடைந்திருந்தது.

சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் மறுசீரமைப்பு அமையவேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லையென்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் எதிர்வரும் 13ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடியும். அவ்வாறு இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் பாராளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்படும் என ஜனாதிபதி கூறியிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கும் வகையிலான தேர்தல் மறுசீரமைப்பு அவசியம் என சிறுபான்மை கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது டன், பாராளுமன்றம் கலைக்கப்படுவதையும், தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பான திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படக்கூடாது என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.