செய்திகள்

தேர்தல் பணிகளை முடுக்கிவிடத் தயாராகும் மகிந்த ராஜபக்‌ஷ? கொழும்பில் புதிய அலுவலகம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பொதுத் தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிடுவதற்குத் தயாராகியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கொழும்பு, ராஜகிரியவிலுள்ள Peacock House என்ற இல்லத்தில் அவர் குடியேறவிருக்கின்றார்.

Peacock House பிரபலமான வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானதாகும். தன்னுடைய தேர்தல் நடவடிக்கைகளுக்கான அலுவலகமாக அவர் இதனைப் பயன்படுத்துவார் என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள். அடுத்த ஒரு இரு வாரங்களுக்குள் இந்த இல்லத்தில் அவர் குடியேறலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளையில், தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்திப்பதற்கு நாரேஹென்பிட்டி ஶ்ரீஅபயராம விகாரையை மகிந்த ராஜபக்‌ஷ பயன்படுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு வந்திருந்த மாகாண சபை றுப்பினர்களைச் சந்திப்பதற்கு இந்த விகாரையையே மகிந்த ராஜபக்‌ஷ பயன்படுத்தினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்‌ஷவை இறக்கப்போவதில்லை என்பதில் கட்சியின் பெரும்பான்மையினர் உறுதியாகவுள்ளார்கள். அதற்கேற்றவாறு கட்சியில் தன்னுடைய பிடியை இறுக்குவதில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றிருக்கின்றார். சந்திரிகா குமாரதுங்கவும் கட்சியின் கொள்கை வகுப்புப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை தொழிற் கட்சியின் சார்பில் மகிந்த போட்டியிடலாம் என அக்கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தார்கள். இருந்தபோதிலும், தான் தொடர்ந்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவன் என்றே மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துவருகின்றார். அடுத்த வாரம் இவ்விவகாரம் தொடர்பில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகின்றது.