செய்திகள்

தேர்தல் முறைமை மாற்றம் பற்றி அமைச்சரவைக்கு இன்று பத்திரம்

தேர்தல் முறைமை மாற்றம் சம்பந்தமான பிரேரணை இன்று புதன்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று ஆளுங்கட்சி உறுதியளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் குழு அறையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். “அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு தாம் எதிர்ப்பில்லை. அதை குழப்பவும் முற்படவில்லை. பொறுப்புவாய்ந்த முறையில் கொண்டுவருமாறே வலியுறுத்துகின்றோம். இன்று (நேற்று) காலையே எமக்கு சட்டவரைபு வழங்கப்பட்டது.

ஆங்கிலமொழியில் மாத்திரமே அது இருக்கின்றது. தமிழ், சிங்கள மொழிகளில் சட்டமூலம் இல்லை. உள்ளடக்கங்கள் பற்றி ஆராய்வதற்கு கால அவகாசம் தேவை. காரணம், அரசமைப்புத் திருத்தமானது 10, 20 வருடங்கள் வரை தாக்கம் செலுத்தக்கூடியது. 1978இல் கொண்டுவரப்பட்ட அரசமைப்புத் திருத்தம் இன்னும் அமுலில் இருக்கிறது.

தற்போது எமக்கு வழங்கப்பட்டுள்ள நகல் முழுமை பெற்றதல்ல. பல பகுதிகள் வெட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், இதை எப்படி விவாதத்தக்குட்படுத்துவது? அதேவேளை, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணைக்குழுவின் விசாரணைகளையும் நாம் எதிர்க்கவில்லை.

ஆனால், அரசியல் ரீதியாக விசாரணை நடப்பதையே எதிர்க்கிறோம். 3 வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் விசாரணை இல்லை. எனினும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு பற்றி விசாரணை இடம்பெறுகின்றது. இதன் தார்மீகம்தான் என்ன? தேர்தல் முறைமை மாற்றத்தையும் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவுமே நாம் வலியுறுத்துகின்றோம்.

தேர்தல் முறைமை மாற்றம் சம்பந்தமான யோசனை இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என எமக்கு அரச தரப்பால் கூறப்பட்டுள்ளது. அடுத்த வாரமளவில் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது” – என்றார்.