செய்திகள்

தேர்தல் முறையை உடனடியாக மாற்றப்போவதில்லை: ஐ.தே.க. பேச்சாளர்

தேர்தல் முறைமை மாற்றப்பட்ட பின்னர் தான் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற இறுதித் தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை. எனினும் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அமைச்சரவையில் பேசப்பட்டது என ஐ. தே. க வின் பேச்சாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.

நூறு நாள் வேலைத் திட்டம் நிறைவுபெறும்போது தேர்தல் ஒன்றை நடத்துவது என்ற இலக்கை நோக்கியே நாம் செல்கிறோம். திட்டமிட்டபடி ஏப்ரல் 23 இல் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக கொடுத்த வாக்குறுதியின்படியே பொது திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து செல்கிறோம். சில வேளைகளில் இந்த தினத்திலிருந்து ஓரிரு தினங்கள் முந்தலாம், பிந்தலாம்.

ஆனால் தேர்தல் முறைமையை மாற்றிய பின்னரே தேர்தல் என்ற இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐ. தே. க தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று கட்சியின் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மிக விரைவில் நாம் தேர்தலொன்றுக்குச் செல்வோம். தனிக் கட்சியாக தனிப்பலத்துடன் ஆட்சி அமைப்பதுடன் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்த அரசாக அது அமையும். ஜனாதிபதி மீது எமக்கு நம்பிக்கை இருக்கிறது. பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நல்ல புரிந்துணர்வும் இருக்கிறது என்றும் கூறினார்.

தேர்தல் முறைமை மாற்றப்படவேண்டும் என்பது எமது நீண்ட கால எதிர்பார்ப்பு. இதில் மாற்றுக் கருத்து கிடையாது. இந்த நிலைப்பாட்டையே அனைத்து கட்சிகளும் கொண்டிருக்கின்றன. என்றாலும் தேர்தல் முறைமை என்பது உடனடியாக மாற்றமுடியாது சகல கட்சிகளுடனும் பேசி தீர்க்கப்படவேண்டும்.

இந்நிலையில் சிறுபான்மை கட்சிகள் தேர்தல் முறைமை மாற்றப்படாமல் இதே முறைமையின் கீழ் செல்லலாம் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளன. எவ்வாறாயினும் நாம் இது தொடர்பாக பேசுகின்றோம் என்றும் கூறினார்.

ஸ்ரீல. சு. க. வினர் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி தேர்தலை பின்போடும் செயலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என செய்தியாளர் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தனித்து தனிக் கட்சியாக தேர்தலில் வெற்றிபெற்று அதன் பின்னரே தேசிய அரசு பற்றி நாம் பேசுவோம். தேசிய அரசு பற்றிய இறுதி தீர்மானம் எடுப்பதும் நாங்களே என்றும் அமைச்சர் அகில தெரிவித்தார்.