செய்திகள்

தேர்தல் முறையை மாற்றினால்தான் 19 வது திருத்தத்துக்கு ஆதரவு: ஶ்ரீல.சு.க. அறிவிப்பு

தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாலே 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. 19வது திருத்தச் சட்ட மூலமும், தேர்தல் முறையை மாற்றும் 20வது திருத்தச் சட்டமூலமும் ஒரே நேரத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டமை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

19வது திருத்தச் சட்ட மூலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 19வது மற்றும் 20 வது திருத்தச் சட்ட மூலங்கள் ஒரே நாளில் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20வது திருத்தச் சட்ட மூலம் கொண்டுவரப்பட்டாலே 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு தாம் ஆதரவு வழங்குவோம் என்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இதற்கமைய பாராளுமன்றம் கலைக்கப் படுவது மேலும் பிற்போடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இரண்டு திருத்தச்சட்ட மூலங்களும் நிறைவேற்ற ப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற குறிப்பை இதில் உட்படுத்துவதற்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறை மாற்றத்தையும் 19வது திருத்தச் சட்ட மூலத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டுமென சுதந்திரக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளையில், 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.

தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கியதாக 20வது திருத்தச் சட்ட மூலம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழு இது தொடர்பில் ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய குழு வொன்றையும் நியமித் துள்ளது.

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா ஆகியோர் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவதாயின் தேர்தல் முறையை மாற்றும் 20வது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.