தேர்தல் முறையை மாற்றுவதா? சிறுபான்மையினக் கட்சிகள் ஆராயத் திட்டம்
தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டதுடன் 19ஆவது திருத்தச்சட்டத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் சபையில் சமர்ப்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
எவன்கார்ட் பாதுகாப்பு நிறுவன விவகாரம் குறித்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன் சிறுபான்மை கட்சிகள் அடுத்த வார இறுதிக்குள் தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பாக விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தேசிய நிறைவேற்று சபையின் கூட்டம் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது இரண்டு முக்கிய விடயங்கள் குறித்து விசேடமாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
அமைச்சரவைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும் கோட்டே சதஹம் செவன விகாராதிபதியுமான அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும் வலியுறுத்தியதுடன் தேர்தல் முறை , நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றத்தை கொண்டு வருவதற்கான சட்டமூலங்கள் ஒரேநேரத்திலேயே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும் என வலியுறுத்தினர்.
அதேநேரம் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் மோசமான அரசியல் கலாசாரத்திற்குள் காணப்படுகின்றன எனக்குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க விருப்பு வாக்குமுறை அத்தியாவசியமில்லை எனக் கூறியதுடன் பாராளுமன்ற பிரதிநித்துவங்களில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறும், சிறுபான்மை பிரதிநிதித்துவங்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தாதவாறும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். அதுவே உண்மையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதன் போது ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதில் தவறில்லை. தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையினால் ஒரளவெனும் சிறுபான்மை மக்கள் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்நிலையில் சிறுபான்மை பிரதிநிதித்துவங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு முறைமையைும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என உறுதியாக கூறினார்.
அத்துடன் சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை குறைக்கும் வகையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால் முன்மொழியப்பட்ட தேர்தல் முறைமை தொடர்பான பரிந்துரையை ஏற்கமுடியாதெனவும் மனோகணேசன் தெரிவித்திருந்தார். அதன் போது சில பெரும்பான்மை கட்சியின் தலைவர்களும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் அடுத்தவார இறுதிக்குள் தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பாக விசேட கலந்துரையாடலென்றில் ஈடுபடுவதெனவும் இதன் போது எடுக்கப்படும் முடிவுகள் தேர்தல் முறைமை சீர்திருத்ததின் போது உள்வாங்கப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டது.