செய்திகள்

தேர்தல் முறையை மாற்ற வேண்டும்: ஶ்ரீ ல.சு.க. வின் மத்திய குழு வலியுறுத்து

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை இல்லாதொழிப்பதில் கவனம் செலுத்தப்படுவதைப் போல தேர்தல் முறையை மாற்றியமைப்பதிலும் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் மத்திய குழுவின் கூட்டம் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றபோது, சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டது.

ஜனாதிபதிக்குரியநிறைவேற்று அதிகாரங்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும் அதேவேளையில் தேர்தல் முறையில் மாற்றம் செய்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை மத்திய குழு வலியுறுத்தியதாகத் தெரிகின்றது.

பாராளுமன்றத்தைக் கலைக்கப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அச்சுறுத்தினாலும், இது குறித்த தமது நிலைப்பாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக இருக்க வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மீண்டும் ஆராய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ள அதேவேளையில், இதற்கான திருத்தங்களை முன்வைக்க செயற்குழு உறுப்பினர்களுக்கு ஒருவார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.