செய்திகள்

தேர்தல் முறை திருத்தம்: ஐ.ம.சு.கூ இன்று தீர்மானிக்கும்

தேர்தல் முறை திருத்தம் தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையே விசேட கலந்துரையாடலொன்று இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த கலந்துரையாடலின் போது தேர்தல் முறை திருத்தம் தொடர்பாக தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. இதேவேளை 20 ஆவது திருத்தமாக தேர்தல் முறை திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படவுள்ளதுடன் தேர்தல் திருத்தத்துடனேயே 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக மற்றைய கட்சிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பாகவும் இங்கு ஆராயப்படவுள்ளது.

எவ்வாறாயினும் 19 திருத்தம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் அதனை உடனடியாக நிறைவேற்றாது தேர்தல் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை நிறைவேற்றுவதற்கே திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.