செய்திகள்

தேர்தல் முறை திருத்தால் சிறுபான்மை சமூகங்கள் பாதிக்கப்படக்கூடாது : நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

“நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்திற்காகவே மக்கள் வாக்களித்தார்கள். அனைத்து மக்களுக்குமான நீதியை அடிப்படையாகக் கொண்டே நல்லாட்சி உருவாக முடியும் அந்த வகையில் தேர்தல் முறைதிருத்தமானது சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்து விடக்கூடாது” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே இந்த அமைப்பின் தவிசாளர் எம்.எம்..அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பங்கேற்பு குறித்தும் கருத்துத் தெரிவிக்கும் விசேட ஊடக சந்திப்பு அதன் கொழும்பு காரியாலயத்தில் நடைபெற்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.ஆர்.நஜா முஹமத், அதன் தேசிய அமைப்பாளர் எம்.வி.எம்.பிர்தௌஸ் மற்றும் அதன் தலைமைத்துவசபை உறுப்பினர்களான சட்டத்தரணி இம்தியாஸ், முஹம்மத் றிஸ்மி ஆகியோரும் இவ்வூடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இங்கு, மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“வெறும் ஆட்சி மாற்றத்திற்காகவல்லாமல் ஆட்சி முறை மாற்றம் ஒன்றுக்காகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள். அந்த ஆட்சிமுறை மாற்றம் என்பது நல்லாட்சியை நோக்கியதாக அமையும் என்ற உத்தரவாதம் மக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த ஆட்சி முறை மாற்றத்தில் முதற்கட்டமாக 100 நாள் வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டது.

அதன் அம்சங்கள் சில வாக்களித்தபடி ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் பல முக்கிய அம்சங்களின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை. இன்னும் பல முக்கிய அம்சங்கள் தொடங்கப்படவுமில்லை. நம்பிக்கையோடு வாக்களித்த மக்களை இது கவலையடையச் செய்திருக்கிறது.

இந்த நிலையில் இன்று இரண்டு விடயங்கள் அதிக விவாதத்திற்கும், சர்ச்சைக்கும் உள்ளாகியிருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா.? இல்லையா.? என்ற விடயமும் தேர்தல் முறைத் திருத்தம் தேர்தலுக்கு முன்னரே கொண்டுவரப்பட வேண்டுமா.? என்பதுமே அதிக சர்ச்சைக்குரிய விடயங்களாகும்.

100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்கள் யாவுமே நாட்டு மக்கள் சகலருக்கும் சாதகமான விடயங்களாக இருந்தாலும் கூட, தேர்தல் முறைத் திருத்தமானது அவ்வாறானதல்ல.

முழுமையான விகிதாசார முறையும், தொகுதிவாரி முறையும் கலந்த புதிய தேர்தல் முறை சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதனை நாம் தேர்தலுக்கு முன்பிருந்தே வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையிலேயே தேர்தல் முறைத் திருத்த நடவடிக்கைகளோடு தொடர்புபட்ட சட்ட வல்லுனர்களோடும், ஏனையவர்களோடும் பல கலந்தாலோசனைகளை நாம் நடாத்தியிருக்கிறோம்.

புதிய தேர்தல் முறைத் திருத்தமானது சிறு பான்மையினர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களைப் பாதிக்காத வகையில் கட்டமைக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளினை தேர்தலுக்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடமும் முன்வைத்தோம். தொடர்ந்தும் இந்த விடயத்தில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

இருப்பினும் தேர்தலின் பின்னர் புதிய தேசிய அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகள் இவ்விடயம் தொடர்பில் உரிய அழுத்தத்துடன் நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை. தேர்தலுக்கு முன்னரும் கூட இது தொடர்பிலான கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கவுமில்லை.

நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை மாற்றத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் தேர்தல் முறை மாற்றமானது எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி இழைப்பதாக அமைந்துவிடக்கூடாது. அனைத்து சமூகங்களுக்குமுரிய நியாயமான உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் நீதியை அடித்தளமாகக் கொண்டே நல்லாட்சியொன்றை ஸ்தாபிக்க முடியும். அந்த வகையில் புதிய தேர்தல் முறையானது சகல சிறுபான்மை மக்களினதும் நியாயமானஅரசியல் பிரதிநிதித்துவங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் சிவில் சமூகம் சார்பாக தேசிய சூறா சபையினாலும், முஸ்லிம் கவுன்சலினாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அது போலவே, அரசியல் தரப்பிலிருந்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படல் வேண்டும். இந்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளாக அமைதல் வேண்டும். இதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் ஏனைய தரப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்.”