செய்திகள்

தேர்தல் முறை தொடர்பான சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் நிலைப்பாடு நாளை: மனோ கணேசன்

சிறு கட்சிகளின் பேரவை நாளை கொழும்பில் கூடி தேர்தல் முறை மாற்றத்தை கோரும் 20ம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதாக என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த 29ம் திகதி ஜனாதிபதியால் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட 20ம் திருத்த யோசனைகள், சிறு கட்சி தலைவர்களால் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். சிறு கட்சிகளின் நடவடிக்கை குழு ஏற்கனவே பலமுறை கூடி இந்த விவகாரம் தொடர்பான கொள்கை ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது.

நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற பிரதமருடனான சந்திப்பிலும், இன்று காலை தேர்தல் ஆணையாளருடன் நடைபெற்ற சந்திப்பிலும் இவை தொடர்பாக ஆராயப்பட்டன. இந்நிலையில் அனைத்து சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு பத்தரமுல்லை வோடர்ஸ் எட்ஜ் விடுதியில் கூடி, நடவடிக்கை குழு தயாரித்துள்ள ஆவணத்தை ஆராய்ந்து முடிவு எடுக்க உள்ளனர்.

இக்கூட்டம் தொடர்பான அழைப்புகள் அனைத்து சிறு கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்