செய்திகள்

தேர்தல் முறை தொடர்பில் ஸ்ரீல. சுதந்திர கட்சியுடன் மனோ கணேசன் கலந்துரையாடல்

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசனுக்கும், தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைத்துள்ள குழு அங்கத்தவர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக அமைச்சர்கள் டிலான் பெரேரா, எஸ். பி. திசாநாயக்க ஆகியோரும், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் மனோ கணேசனுடன் கட்சியின் உப செயலாளர் சண். குகவரதன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

வீடமைப்பு அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் மனோ கணேசன் க கூறியதாவது,

சிறுபான்மை கட்சிகளின் அச்சத்தை கவனத்தில் எடுக்காமல் கொண்டு வரப்படும் எந்த ஒரு யோசனை திட்டத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று எங்களுடன் இனரீதியான சிறுபான்மை கட்சிகள் மட்டுமல்ல, சிங்கள மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சிறு கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

வட-கிழக்கில், தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிரேரிக்கப்பட்டுள்ள புதிய முறைகளின் காரணமாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்காவிட்டலும் கூட, வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவ உரிமைகள் தொடர்பில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தும் முகமாக, நமது சிறு கட்சிகளின் பேரவையில் கலந்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்நாட்டில் நாம் ஓர் மிகப்பெரிய மக்கள் தொகையை பிரதிநிதித்துவம் செய்கின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்கள் உறுதி செய்யப்பட அதிக எண்ணிக்கையில் பல்-அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். தற்போது கொழும்பு மத்தி, பேருவளை, ஹரிஸ்பத்துவ, நுவரேலிய-மஸ்கெலிய ஆகிய நான்கு தொகுதிகள் மாத்திரமே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே பல்-அங்கத்தவர் தொகுதிகளாக இருக்கின்றன. இந்த தொகை குறைந்தபட்சம் இன்னமும் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டு, இங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களை நமது ஜனத்தொகைகளுக்கு ஏற்ப உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, கண்டி, இரத்தினபுரி, கம்பஹா, பதுளை மாவட்டங்களிலும் புதிய பல்-அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் இன்னமும் மூன்று மேலதிக புதிய பல்-அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். நுவரேலிய மாவட்டத்தில் குறைந்தபட்சம் நான்கு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் மறு சீரமைப்பு நடைபெற வேண்டும். இவற்றுக்கான உத்தரவாதங்கள் கிடைக்காத வரைக்கும் நாம் புதிய மாற்றங்களுக்கு உடன்பாடு தெரிவிப்பது கடினமான காரியம் ஆகும்.

எங்களது இந்த கருத்துகளை தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைத்துள்ள குழு அங்கத்தவர்களான அமைச்சர்கள் டிலான் பெரேரா, எஸ். பி. திசாநாயக்க ஆகியோரிடம் தெரிவித்தோம்.

தங்களது யோசனைகள் இறுதி தீர்மானங்கள் இல்லை எனவும், அவற்றை மாற்றி அனைவரும் குறிப்பாக சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் ஏற்று கொள்ளும் வண்ணம் திருத்தி அமைக்க தாம் தயார் என்றும் அவர்கள் பதில் கூறினர். பல்-அங்கத்தவர் தொகுதிகள் தொடர்பான உங்கள் அக்கறையை நாம் புரிந்து கொள்கிறோம். நீங்கள் இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் தீவிரமாக வலியுறுத்தியுள்ளதும் எமக்கு தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையாளர் பல்-அங்கத்தவர் தொகுதிகள் புதிதாக மேலும் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனடிப்படையில் நமது யோசனை திட்டம், பதினைந்து புதிய பல்-அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதை அடிநாதமாக கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் எம்மிடம் தெரிவித்தனர். நமது கலந்துரையாடல்களை மேலும் தொடருவதற்கு இரு தரப்பினரும் எண்ணியுள்ளோம்.