செய்திகள்

தேர்தல் முறை மாற்றம்: அமைச்சரவையிலும் முரண்பாடு

புதிய தேர்தல் முறை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று (புதன்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய தேர்தல் முறை குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரியால் நியமிக்கப்பட்ட உபகுழுவின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு, நேற்று இரவு கூடிய அமைச்சரவையில் புதிய தேர்தல் முறை குறித்த யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

இதற்கு சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலும் தேர்தல் முறை குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லையென உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தேர்தல் முறை குறித்து விரைவில் சிறுபான்மை கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவதாக ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் முறை மாற்றம் குறித்த யோசனை, கடந்த 13ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோதும் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதனையடுத்து, அது தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் உபகுழுவொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.