செய்திகள்

தேர்தல் முறை மாற்றம்: கட்சிகளிடையே உடன்பாடு இல்லை என்கிறார் ஹக்கீம்

புதிய தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே எவ்வித இணக்கப்பாடும் ஏற்படவில்லையென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி நீர் வளம், நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய தேர்தல் முறைமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தின் பங்குதாரர்கள் என்ற வகையில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். 19ஆவது அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் எமக்கும் பாரிய பொறுப்பு உண்டு. இந்த அரசியலமைப்பை மாற்ற வேண்டுமென்றே மக்களும் எதிர்பார்த்து வாக்களித்தனர். தனிக்கட்சி என்ற வகையில் மக்கள் ஆணைக்கு எதிராக நாம் செயற்பட முடியாது.

நேற்று முன்தினம் அமைச்சரவை சந்திப்பில் 19ஆவது அரசியலமைப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்தன. எனினும் புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்படவில்லை.

இதேவேளை, நேற்று காலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஆளும், எதிர்க் கட்சியினர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் தேர்தல் ஆணையாளரும் இதில் கலந்து கொண்டார்.

சுமார் மூன்று மணித்தி யாலங்கள் வரை நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதேவேளை, தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.

சிறுபான்மை கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக காணப்படுவதால் (இன்று) நேற்று எனது வாசஸ்தலத்தில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடன் விசேடசந்திப்பொன்று நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மனோ கணேசனின் கட்சி, மலையக மக்கள் முன்னணி, மலையக கட்சிகள், வடக்கில் இருந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, டக்ளஸ் தேவானந்தா உட்பட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.