செய்திகள்

தேவாலயத்திற்குள் புகுந்து கருப்பினத்தவர்களை சுட்டுக் கொன்ற வெள்ளையர் கைது

அமெரிக்காவில் உள்ள பிரபல கருப்பினத்தவர்கள் தேவாலயத்திற்குள் புகுந்து 9 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ல்ஸ்டன் நகரில் இருக்கும் பிரபல இமானுவல் ஆப்பிரிக்க மெதடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில் கடந்த புதன்கிழமை மாலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அவ்வேளை தேவாலயத்திற்குள் புகுந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார். இதில் 9 பேர் பலியாகினர்.

அவர் தப்பியோடும்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் அவரது உருவம் பதிவாகியிருந்தது. அந்த புகைப்படத்தை எடுத்து போலீசார் வெளியிட்டு அவர் குறித்த விவரம் தெரிந்தால் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் 9 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பெயர் டிலன் ரூப். 21 வயதாகும் அவர் கருப்பினத்தவர்கள் மீது கொண்ட வெறுப்பால் இந்த செயலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.