செய்திகள்

தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுபவர்கள் கைது செய்யப்படுவர்

யாழ்.மாவட்டத்தில் இரவு 7.30 மணிக்குப் பின்னர் தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வூட்லர் எச்சரித்துள்ளார்.

கைது செய்யப்படுபவர்கள் மாணவர்களாகவிருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது எனவும் அவர் கண்டிப்பாகக் கூறியுள்ளார்.
போதைப் பொருள் பாவனை தொடர்பில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொக்குவில் இந்துக்கல்லூரியில் நேற்று மாலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன் போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை, விற்பனை என்பன அதிகரித்து வருகிறது. மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துச் செல்வது கவலையளிக்கக் கூடியது.

போதைப் பொருட்கள் பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது பாடசாலைகள் முன்பாகவுள்ள ஐஸ்கிறீம், வெற்றிலை, மாங்காய் வியாபாரக் கடைகளை அகற்றியுள்ளோம். போதை வஸ்துக்களை விற்பனை செய்தவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளோம்.  பாடசாலைகளை மையப்படுத்தி ரோந்து சேவைகளை ஆரம்பித்துள்ளோம்.

போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.இதற்குப் பொதுமக்களது ஒத்துழைப்பும் எமக்குத் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.