செய்திகள்

தொடர் அரசு விடுமுறைகளால் அரச ஊழியர்களுக்கு ஊதியம் தாமதம்

தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கான மாத ஊதியம், ஓய்வூதியங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 31 அல்லது 30 ஆம் தேதியில்  வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆனால், இந்த மாதத்தின் இறுதி நாளான 31-ஆம் தேதியன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாது எனவும், அதற்குப் பதிலாக ஏப்ரல் 6-ஆம் தேதியே வரவு வைக்கப்படும் என்றும் கருவூல கணக்குத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வரவு-செலவு கணக்கு விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, நிதியாண்டு தொடங்கும் தினமான ஏப்ரல் 1-ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறையாகும். இந்த விடுமுறையைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் அரசு விடுமுறைகள் வருகின்றன. ஏப்ரல் 2-ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தியும், ஏப்ரல் 3-ஆம் தேதி புனித வெள்ளியும் வருகின்றன. இரண்டு தினங்களும் அரசு விடுமுறையாகும். இந்த இரு தினங்களிலும் வங்கிகள் செயல்படாது.

ஏப்ரல் 4 சனிக்கிழமை வங்கிகள் செயல்படும் என்றாலும், ஊதியப் பட்டியலை வங்கிகளுக்கு அளிக்கும் பணியில் ஈடுபடும் மாநில அரசின் கருவூலத் துறையானது செயல்படாது. இதனால், அன்றைய தினமும் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை வரவு வைப்பது சிரமம். ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல், அரசு விடுமுறை என்பதால், ஏப்ரல் 6- ஆம் தேதி திங்கள்கிழமை அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.