செய்திகள்

தொடர் குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினார் பிரதமர் ஷேக் ஹசினா!

வங்க தேசத்தில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா நூலிழையில் உயிர் தப்பினார். வங்க தேச நாடாளுமன்றத் தேர்தலில் தில்லு முல்லு நடந்ததாகவும், எனவே மறுதேர்தல் நடத்த வேண்டும் எனக்கோரியும், அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடந்த இரண்டு மாத காலமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. பொது வாகனங்களை எரித்தும், பயணிகள் மற்றும் ஆளும்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியும் நடத்தப்பட்டு வரும் போராட்டங்களில், இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று தலைநகர் டாக்காவில் உள்ள ஷுராவர்தி உத்யன் பகுதியில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் ஷேக் ஹசினா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது டாக்கா நகரத்தின் முக்கிய சந்தைப் பகுதியான கர்வான் பஜாரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. குண்டு வெடிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன்னதாகத் தான், அந்த இடத்தை பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாகனம் கடந்து சென்றது. இதனால், பிரதமர் நூலிழையில் உயிர் தப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.