செய்திகள்

தொடர் கொலை மிரட்டல்: வங்காளதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றார்

மத அடிப்படைவாதிகளின் தொடர் கொலை மிரட்டலை அடுத்து இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்துள்ளார் வங்காளதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
தஸ்லிமா நஸ்ரின் எழுதிய புத்தகத்திற்கு வங்காளதேச நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். டெல்லி மற்றும் கொல்கத்தாவில் வசித்து வந்த அவருக்கு இந்தியாவிலும் எதிர்ப்புகளும் மிரட்டல்களும் இருந்துவந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களில் வங்காளதேசத்தில் 3 வலைதள எழுத்தாளர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலைகளுக்கு முக்கிய காரணம் அவர்கள் மதத்திற்கு எதிராகவும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் எழுதி வந்ததுதான் என கூறப்பட்டது.

இந்நிலையில் கொல்கத்தாவில் வசித்து வந்த தஸ்லிமா நஸ்ரினுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தது. இதனால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு குழுவின் உதவியுடன் தஸ்லிமா நஸ்ரின் அந்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.அதேசமயம் கொல்கத்தா மண்ணில் என் தாய் நாட்டின் வாசம் வீசுகிறது என கூறிய தஸ்லிமா நஸ்ரின் நிரந்தரமாக கொல்கத்தாவிலேயே வசிக்க விரும்புவதாக தெரிவித்துவந்தது குறிப்பிடத்தக்கது.