செய்திகள்

தொண்டராசிரியரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் நீண்டகாலம் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவோர் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறுகோரி நேற்று திங்கட்கிழமை காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுத்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆளுநரின் உறுதிமொழியை தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது.
காலை 11.30 மணி தொடக்கம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை தொண்டர் ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குறிப்பாக போர்க் காலத்திலும் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியதுடன், தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் கடந்த 19.5.2015 ஆம் திகதி மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பியிருக்கும் சுற்றுநிருபத்தில் தொண்டர் ஆசிரியர்களை பாடசாலைகளில் வைத்திருக்கவேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது என்ன அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படாவிட்டால் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தினை தாம் முன்னெடுக்கப்போவதாகவும் தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியதுடன் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் அனுமதி பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து ஆசிரியர்களுடன் பேசிய ஆளுநர், கல்வியமைச்சின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது புதிய தொண்டர் ஆசிரியர்களை பணிக்குச் சேர்த்துக் கொள்ளவேண்டாம் என்பதே. அதில் நீண்டகாலம் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தொடர்பாக எவையும் குறிப்பிடப்படவில்லை. நீண்டகாலம் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு மத்திய கல்வி அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே நீண்டகாலம் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கான நிரந்தர நியமனம் விரைவில் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்தில் கைவிடப்பட்டது.