செய்திகள்

தொண்டைமானாறு கடலில் நீராடிய 22 வயது இளைஞர் நீரில் மூழ்கி பலி

யாழ்.தொண்டைமானாறு கடலில் நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற பன்னிரெண்டு பேரில் இளைஞரொருவர் நேற்றுச் சனிக்கிழமை பிற்பகல் 03 மணியளவில்நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.

புத்தூர் பகுதியிலிருந்து நண்பனொருவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காகத் தொண்டைமானாறு கடற்கரைக்குப் பன்னிரெண்டு பேர் சென்றுள்ளனர்.அனைவரும் கடலில் குளித்து விட்டு வெளியில் வந்து கேக் வெட்டிக் கொண்டாட நினைத்துத் தம்முடன் வந்த ஒரு நண்பனைக் காணாது தேடியுள்ளனர்.இந்த நிலையில் குறித்த இளைஞர் நீரில் மூழ்கிக் காணாமற் போயிருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில் அவரைத் தேடும் பணியில் மீனவர்களும்,சுழியோடுகளும் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

புத்தூர் வடக்குப் புத்தூரைச் சேர்ந்த கருணானந்தன் மிதுலன்(வயது-22) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவராவார்.

யாழ்.நகர் நிருபர்-