செய்திகள்

தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்தவர் எம்ஜிஆர்: சரோஜாதேவி

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஸ்ரீநாகி ரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சென்ற ஆண்டின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்துக்கு வழங்கப்பட்டது.

ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் விருதினை வழங்கினார். விருதாக கேடயத்துடன் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் அதன் இணை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விருதை பெற்று கொண்டார்.

சரோஜாதேவி பேசும்போது, ”நானும், எம்.ஜி.ஆரும் நடித்த ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ படப்பிடிப்பு வாஹினி ஸ்டுடியோவில் எட்டாவது தளத்தில் நடந்தது. முதல் நாள் அந்தக் கடைத் தெரு செட் தீப்பிடித்து எரிந்து விட்டது. இதைப் போய் அவரிடம் சொன்ன போது ‘தொழிலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்றார். அந்த அளவுக்கு தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்தவர். அவர்களும் முழு மூச்சாக இறங்கி ஒரே நாளில் சரி செய்து விட்டார்கள்…” ” என்றார்.

விழாவில் ‘மெட்ராஸ்’ படக்குழுவைச் சேர்ந்த நடிகர் கலையரசன், நடிகை ரித்விகா, கலை இயக்குநர் ராமலிங்கம் ஒளிப்பதிவாளர் முரளி, எடிட்டர் பிரவீன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்த விருது வழங்கும் விழாவை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் முன்னெடுத்து வழிகாட்டினார்.