செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சீனாவுக்கு பயணித்த ஸ்ரீ லங்கன் எயர் லைன்ஸ் விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனா நோக்கி பயணித்த ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனா ஷங்காய் நகர் நோக்கி புறப்பட்ட குறித்த விமானம் இடைவழியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் பிற்பகல் 2.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 165 பயணிகள் இருந்துள்ள நிலையில் அவர்கள் வேறு விமானம் மூலம் ஷங்காய் நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த வாரம் வேறு விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றும் இதேபோல் அவசரமாக கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.