செய்திகள்

தோட்ட தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கையை சுபீட்சமடைய செய்ய ஆறுமுகன் தொண்டமானுடன் கைகோர்க்கவுள்ளேன்

தோட்ட தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கையை இந்த சூழ்நிலையில் சுபீட்சமடைய செய்ய ஆறுமுகன் தொண்டமானுடன் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கைகோர்த்து செயலாற்ற உள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

தலவாக்கலை நகரில் 20.03.2016 அன்று நடைபெற்ற இ.தொ.காவின் மகளிர் தின விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் பெருந்தோட்டதுறை அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது,

தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் கண்கள், இவர்கள் மதிக்கப்பட வேண்டிய மக்கள் இன்றைய சூழ்நிலையில் அவர்களுடைய வாழ்வுக்கு புதுயுகம் படைக்க வேண்டும்.

இதனை அடிப்படையாக கொண்டு நானும், ஆறுமுகன் தொண்டமானும் கலந்தாலோசித்து கைகோர்த்து செயல்பட உள்ளோம்.

தோட்டங்கள் தொழிலாளர்களால் பலப்படுத்தப்பட்டது. கூடிய உரிமை தொழிலாளர்களுக்கு தோட்ட பகுதிகளில் உண்டு. எதிர்வரும் காலத்தில் தோட்டப்பகுதிகளை இத் தொழிலாளர்களுக்கு 50 வீதமாக பிரித்து அவர்களுக்கு ஒப்பனையும் வழங்கி கௌரவப்படுத்தவுள்ளோம்.

எந்த தோட்ட நிர்வாகமாக இருந்தாலும் சரி அந்த தோட்டத்தின் அரைவாசி தொழிலாளர்களுக்கு அரைவாசி நிர்வாகத்திற்கும் வழங்கி தொழிலாளர்களின் வாழ்க்கையின் வறுமையை இல்லாதொழிக்கவுள்ளோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது சாதாரணமான ஒரு கட்சி அல்ல. இந்த கட்சியின் ஊடாக நடைபெறும் இவ்விழாவுக்கு தனிப்பட்ட நவீன் திஸாநாயக்கவாக நான் வரவில்லை. இந்த நாட்டின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் ஒரு அமைச்சராக வந்திருக்கின்றேன்.

இந்த நிகழ்வில் நான் கட்டயமாக கலந்து கொள்ள வேண்டும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றது. அதில் ஒன்று தான் இ.தொ.காவின் மக்கள் பலம். ஒரு காலமும் இ.தொ.கா வை யாராலும் அழித்தொழிக்க முடியாது என்பது நான் கூறும் உண்மை.

எனது தந்தை காமினி திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இருந்த போது மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்க்காள செயலாற்றினார்.

அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் தலைவர் தொண்டமானுடன் கூட இருந்திருப்பார். இவ்வாறான ஒற்றுமையை வலுப்படுத்தவே எதிர்காலத்தில் நானும் ஆறுமுகன் தொண்டமானும் கைகோர்த்து செயலாற்றவுள்ளோம். இனவாதத்தை முற்றிலும் எதிர்க்கும் ஆறுமுகன் தொண்டமான் இன்று நம் மத்தியில் இருக்கின்றார். இவரை நம்பியே மலையக தோட்ட தொழிலாளர்கள் இருக்கின்றார்கள் என்பதை யாரும் மறந்துவிட கூடாது என்றார்.

n10