தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கு 1000 ரூபா கட்டாயம் பெற்று தருவேன்: ஆறுமுகன் தொண்டமான்
கஷ்டப்பட்டு உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கான சம்பளத்தொகை 1000 ரூபாவினை கட்டாயம் பெற்று தருவேன் என்றும், கடந்த காலங்களில் சம்பள பேச்சு வார்த்தைகளின் போது காலங்கள் கூடுதலாக எடுத்த போதும் அக்காலத்தின் நிலுவை சம்பளத்தொகையினை குறையின்றி சம்பள உயர்வு தொகையுடன் பெற்று கொடுத்தோம் எனும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் டிக்கோயா, தலவாகலை நுவரேலியா மற்றும் இராகலை ஆகியஇடங்களில் இடம் பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர் தலைவிகளுக்கான கூட்டத்தின் போது தெரிவித்தார்.
அதே வேலை சம்பள உயர்வினை பெற்றுக்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பலவழிகள் இருக்கும் போது சில மலையகத்தின் அரசியல் வாதிகள் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள தொழிலாளர்களை பகடக்காய்களாக பயன்படுத்தி அவர்களின் அரசியல் சுயலாபத்தை தேடுகிறார்கள் . இதற்கு தொழிலாளர்கள் பலிகேடாகாமல் எதிர் காலத்தில் சிந்தித்து செயற்படுமாறு தொழிலாளர்களை கேட்டுகொண்டார்.
மேலும் கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் தற்போது நடைமுறை படுத்த இருக்கும் 20 வது சீர்த்திருத்தத்தின் ஊடாக சிறுப்பான்மையினருக்கு 16 பிரதிநிதித்துவத்தை பெற்று கொடுக்க வேண்டியதும் உறுதி படுத்துவதும் அவர்களின் கடமை என்று கூறியதோடு 16 பிரதிநிதித்துவத்தை பெற்று கொடுக்க தவறுமிடத்து அமைச்சரவை அமைச்சர்களாக இருப்பதற்கு அருகதை அற்றவர்களாக கருதப்படுவர் எனவும் 16 பிரதிநிதித்துவத்தை பெற்று கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இ .தோ .கா வின் மத்திய மாகண சபை உறுப்பினர்களான எ. பி . சக்திவேல் , எம்.ரமேஷ். கணபதி கனகராஜ். இ .தோ .கா வின் உப தலைவர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்