செய்திகள்

தோற்றாலும் மத்திய அரசின் உதவிகள் தொடரும்..

அசாம் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும். ஒருவேளை தோற்றாலும், மத்திய அரசின் உதவிகள் தொடரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

அசாமிலுள்ள பர்கெத்ரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: சி.ஏ.ஜி., வெளியிட்டுள்ள அறிக்கையில், அசாமில் ரூ.1.80 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்குகள் எதுவும் இல்லாத நிலையில், இவ்வளவு பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றிதல்களை அசாம் முதல்வர் தருண் கோகாய் சி.ஏ.ஜி.,யிடம் அளிக்கவில்லை.

அசாமில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு முயற்சித்த போது, அப்பணிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க தருண் கோகாய் கோரிக்கை விடுத்தார். அசாமில் மட்டுமின்றி, மத்தியில் காங்., ஆட்சி செய்த போதும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதை மறக்க முடியாது. 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல் ஆகியவை காங்., ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல்கள். பா.ஜ., ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ஊழல்கள் நடைபெறாது.

எனவே ஊழலற்ற ஆட்சி அமைய அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.,வை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒருவேளை தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அசாமிற்கு மத்திய அரசின் உதவிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

N5